செவ்வாய், 15 மார்ச், 2022

வெயிட்டிங் பார் யூ..❤️

~


❤️


நமக்குள் நிகழ்ந்த 

இவ்வலசையின் நீண்ட பிரிவை 

எவ்வாறு தாங்கிக்கொள்ள...?

இந் நாட்களில் உன் பெரும் 

விளைச்சலில் இருந்து நான் திருடிய 

ஒரு தானியம் என் உயிரை 

எப்போதும் இயக்கிக் 

கொண்டிருக்கும் இல்லையா?


வாதையின் நீட்சியில்

குரல்வளையில் திரண்டு 

தழுதழுக்கும் துளிப்புனல் அதற்கு 

நீர்வார்க்கும் இல்லையா?

 

இப்போது நம் கூடு, முள் கொண்டு 

கட்ட பட்டதின் அசௌகரியம் பற்றி நீ 

அறிந்திருக்க நேரிடும்,


முட்கள் பூக்கும் பருவம் வெகு 

தொலைவில் இல்லை என்பதை 

மனதில் கொள்,


என் நீண்ட பயணத்தின் அசதியை  

உன் குறுஞ்செய்தியின் நகக்கண்கள் 

நீவிக் கொண்டிருக்கிறது.,


மூடிய அதன் இமையில் உருளும் 

விழிப்பாவையை நான் வருடும் 

அழுத்தம் உனக்கும் 

விளங்குவதாகவே பாவிக்கிறேன்.,


நீ செலுத்தும் ஸ்மைலீக்கள் விம்மும்  

ஒவ்வொரு ரோமக் கால்களையும் 

அடைத்துக் கொள்கின்றன,


இப்பெரும் இரவை தொலைவில் 

இருந்த வண்ணம் நீ ஸ்ருஷ்டித்துக் 

கொண்டிருக்கிறாய் அத்தனை 

ஏகாந்தமுடன் ; உனது 

விஸ்வத்தில் நான் இங்கே 

ஒவ்வொரு கணமும் பணிக்குடம் 

உடைத்து வீறிட்டுப் பிறக்கிறேன் 

அத்தனை காதலுடன்,


காலம் நம் அகராதியை புதுப் பித்துக் 

கொண்டிருக்கிறது, ஆனால் நாம் 

அதே பழைய அர்த்தம் பரிமளிக்கும் 

வாக்கியங்களை மனனம் செய்து 

கொண்டிருக்கிறோம், நல்லதுதான்

வழமையை அசை போடுவது தானே 

இந்நேரங்களில் நம் இதயங்களை 

துடிக்கச் செய்யும் நெருப்பாகிறது,


நெருக்கத்தில் இருந்த நம் 

உடல்களின் வெப்பத்தைவிட 

தொலைவில் இருக்கும் நம் 

உயிர்களின் வெப்பம் இன்னமும் 

ரோகத்தைக் கூட்டுகிறது,


பிரிவை இணைப்பது 

நினைவுகளின்றி வேறேது..?


இந்நிலையை எங்ஙனம் தாத்பரிக்க? 


ஒரு வண்ணத்துப் பூச்சியின் 

வருகைக்காக ஒரு மலர் காத்துக் 

கிடக்கிறது.,


அல்லது 


உறங்கிக் கொண்டிருக்கும் தாயை 

எடுத்துக்கொள்ள ஒரு சிசு 

கைவிரிக்கிறது.,


அல்லது 


பெரும் அன்பை நிறப்பி வைக்கும் 

ஒரு கலன் நிர்வாணம் பூசிக் 

கொள்கிறது.,


அல்லது


ஒரு துளி தேனை பெரும் கசப்பு 

மெல்லென கசிய விடுகிறது,


அல்லது 


வசப்படாத வார்த்தைகளை எழுதி 

கசக்கி வீசப்பட்டு மையூரிக் கன்றிய 

காகிதம் ; மூச்சு விடுவதற்கென 

கொஞ்சம் விரிந்து கொள்கிறது,


அல்லது


அத்தனை சந்தோஷங்கள் நிகழும் 

ஒரு திருவிழாவின் முடிவில் 

விற்பனை நிகழாது மருகி 

காத்திருக்கும் ஒரு பலூன் 

வியாபாரியின் துயராகிறது,


அல்லது


ஒரு மரணத்தின் நேர்ச்சியை 

எதிர்கொண்டு லயித்துக்கொண்டிருக்கும் 

ஒரு உடலின் ஜீவனாகிறது,


பிரிவை சொல்ல ஏனையதுண்டு, 

அதை உணர்ந்து கொள்ள பிரிவைத் 

தவிர வேறேதும் நிகரான 

அடர்த்தியில்லை,


கண்மணியே காதலே ❤️


நீ முத்தாய்ப்பாக சொன்னது :


""வெயிட்டிங் பார் யூ""❤️


என் ஹிருதயம் எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பது:

 

""கவுண்டிங் பார் யூ...""❤️


""மிஸ் யூ"" என்ற சொற்களில் தான் எத்தனை நீண்ட பிரபஞ்ச வெளியின் தொலைவு அத்தனை அணுக்கமாய் அண்மித்து வந்து அந்தமெல்லாம் வருடிக் கொடுக்கிறது இல்லையா...?


என் காதலின் கதி அதன் தகுதியை கொஞ்சம் போஷித்துக் கொள்கிறது நீ சொன்ன அந்த ""மிஸ் யூவில்""...


மாறாக என் வரிகளால் நான் 

செய்ய நேர்ந்தது யாதெனில் காய்ச்சலின் சூட்டினில் கொதிக்கும் உன் நெற்றியை என் உள்ளங்கையால் தொட்டு, அதன் கொதிப்பின் நிலையை அறிந்து 

நீ சொஸ்தமாகிட  போர்த்திவிடும் 

ஒரு ""லவ் யூ"" என்னும் முத்தம்

மட்டுமே கண்ணே...❤️


தசைகள் பிசகினால் தானே நீவிக் 

கொடுக்கும் சுகம் பற்றி அறிய 

முடியும்...?


உறவை அறிவோம் பிரிவின்

தூரத்திலிருந்து... 


~ சூர்யபாலா... 

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

SP பாலசுப்ரமணியம்...


ஒரு குரல் ஒரு மார்க்கம் போலே

உலகின் அனேக உன்னதங்களையும் 

பரிமளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுமென்றால் அது SP பாலசுப்ரமணியம்...


குழந்தைமைக்கு , தாய்மைக்கு, சேய்மைக்கு, தந்தைமைக்கு, 

காதலுக்கு, காமத்திற்கு, பிரிவிற்கு, பரிவிற்கு, சோகத்திற்கு, புகழுக்கு, வெற்றிக்கு, தோல்விக்கு, ஆறுதலுக்கு என எல்லா உணர்வுகளின் பள்ளங்களிலும் ஒரு மெல்லிய நதியைப் போலே நிரம்பி ஏகி எனது ஒவ்வொரு உணர்வுகளும் கொந்தளிக்கும் கணங்களில் அந்த உணர்ச்சிகளின் பாதம் நனைத்து இளைப்பாற ஏதுவாய் செவியில் ஓடிய அமுதசுரபி நதி அது, 


என் நினைவு தொற்றிய பிராயம் முதல் உடன் பயணித்த பிரிதொரு ஆன்மா, நான் ஆண் என்பதை மறந்து ஒரு ஆணின் குரல் மீது இத்தனை காதல் பொங்கச் செய்த தேவ அதிசயம், கானத்தின் பாவங்கள் ஆரோகணிக்கையில் என் பாவங்களை அவரோகணித்த மத்திமம்,

மனம் தேங்கி நின்ற  வேளைகளில்  புலன்கள் இயங்கச் சொடுக்கிய புதிர் , 

என் தனிமையின் பெரும் மலைச் சரிவுகளில் நிழல் சாய்ந்த தோள், 

என் ஆசையின் விளிம்பில் பெண்டுலம் ஆட்டிய ஊஞ்சல், 

என் காதலின் காய்ச்சல்களை போர்த்திய கம்பளி, 

என் கேவல்களில் விசும்பிய உயிர், என் சோகங்களின் புடம் சேர்த்த சுகம், என் காயங்களை தூண்டிய ரணம், என் மகிழ்வுகளை கொண்டாடிய தோரணம், 

வெறும் வார்த்தைகளை உணர்வுக் கோர்வையாக்கி மனம் உறுத்த ஊதிய புல்லாங்குழல், அனிச்சையாக பதிந்த மனனம் போல நிதம் முணுமுணுக்கும் மனதின் குரல், உள்ளத்தை ஊடருக்கும் குறு வாள், பின் அச்சிதிலங்களை ஒன்றிணைத்துத் தெய்க்கும் குத்தூசி, 

நொதிக்கும் உணர்வுகளின் கசிவை ஒளித்து வைக்கும் பெட்டகம்,

அடிக்கடி புலங்கிச் சலிக்காத மஞ்சம்..


இவையெல்லாம் ஒரு கணத்தில் இழந்ததை ஒப்பாமல் சுயம் இரண்டாக பிளந்து அதிலொன்று இறந்தும், மற்றது மனம் பிறழ்ந்தும் போன தருணம் இது..


உறவுகள் இறந்தால் உரக்க அழுதிடலாம், உடன் இருந்த உணர்வல்லவோ இறந்து 

போனது.


துக்கத்தின் வெம்மை படியும் இந்த பொழுதையும் கூட மீண்டும் அந்த காந்தக் குரலின் சிறு தூத்தல் குளிரச்செய்து விடும்...


இனியெப்போதும் நிகழப் போவதில்லை நேரலைகள், என்றும் அயரப் போவதில்லை நெஞ்சம் உரசும் அந்த இசை அலைகள்...


இறப்பிற்கு தானே அஞ்சலிகள் எல்லாம், இறவா இசைக்கு எதற்கு அஞ்சலி...?


~ சூர்யபாலா.,

புதன், 9 செப்டம்பர், 2020

பயண மார்க்கம்

  


இரவின் தீர்த்தங்கள் உதிரும் துளிகளின் பிரவாகம் பாதையின் தகவுகளுடன் அர்த்தங்களாய் முகிழத் துவங்கியிருந்தது கணங்களில், என் பார்வை முதல் அடியெடுக்க, உன் மையல் இரண்டாம் அடி வைக்க சில தூரம் சலனம் கொண்டோம், உன் புன்னகை அப்பயணத்தின் முதல் திருப்பத்தை தந்தது, அங்கே கொஞ்சம் முயங்கி  இளைப்பாறி இருந்தேன், இளைப்பாறுதல் மடி சாயாமல் எப்படி முழுமை பெறும்?  உன் ஸ்பரிசம் தீண்டி சுகிக்கிறேன், நீயும் அவ்வாறே அதன் அதிர்வெண்களில் கொஞ்சம் தாவித் தவிப் பயணிக்கிறோம், இவ்விரவின் இலக்கை அடைவதற்கு உகந்த வழி யென ஸ்பரிசங்களின் உரசலில் அறிகிறோம் ஆகையால் ; இப்பயணதிற்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுக்கிறோம், உன் மடி தீண்டிய என் இதழ் முத்தங்கள் மேலும் கொஞ்சம் நம்மை நகர்த்த, என் நுதல் மீது இதழ் பதித்து நீயும் கடந்து வருகிறாய் ஒரு முகட்டிற்கு, இரவின் உச்சியில் தீ மூட்டி குளிர் காய்தல் பெருஞ்சுகமல்லவா? சிக்கி முக்கியென ஆலிங்கனத் தணல் துளிர்க்க ஒருவர் உடல் ஒருவருக்கு போர்வையென விரவிக் கலக்கிறோம், களைந்த மஞ்சமெல்லாம் அச்சுவனப் பயணத்தின் தடம், உடல் காய்தல் ரணம்,  அதை மேய்தலும் மேயத் தருவதும் ஏகம் ஊறும் சுகம்...

ஒரு மரணம் போல நாம் இன்னும் அந்த மார்க்கத்தில் இருந்து மீளவே இல்லை... 


~ சூர்யபாலா., 


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

என் சின்னஞ்சிறு மகள்

 என் சின்னஞ்சிறு மகள் 

குறுந்தொடர் ( பகுதி - 3 )


சொற்களின் தேன் பருவம்


எப்போதும் விரல் சப்பி உறங்கும் மகளின் குட்டி அதரங்கள், ஒரு மாய கணத்தில் பிரபஞ்சத்தின் பேரதிசய  அனுப்பிளவு நிகழ்வு போலே ம்ம்மா... என்றது, அவர்களின் அத்தனை நாட்களின் அதீத காத்திருப்பின்  அவிழ்வு, அத்தாழ் திறவு இனி எப்போதும் இன்பம் தரப்போகும் சொற்களால் உடையப் போகும் ஒரு போதையின் காட்டின் போகம் முகிழ்த்தும் மலர் வெளியாகியது, சொற்களின் தேன் பருவம் கனியப் போகும் அசரீரியைக் கண்டு அவர்கள் எல்லையற்ற இன்பத்தில் திளைத்த நொடிகளது, மேலும் அவளின் சொற்களின் மகத்தான கதைகள் தொடர்ந்தது, அச்சொற்களில் பொதிந்த பேரதிசயம் யாதெனில் உணர்வுகளின் லாயத்தில் அவளே உருவாக்கிக் கட்டிய சொற்களை அதன் பந்தய கணத்தில் ஒவ்வொன்றாய் கட்டவிழ்க்கிறாள் என்பதே, அவளின் மொழியாடல்களில் ஒரு முறை உபயோகித்த சொற்கள் மறுமுறை பிரயோகிக்கப்படுவதில்லை ஏனென்றால் அவற்றின் நேர்மைக்காகவும், நேர்த்திக்காகவும், அழகிற்காகவும் இம்மையிலேயே அவைகள் மறுமையின் பேறு கொள்கின்றன ; பின் நாட்களில் அச் சொற்களின் மலர்களை சரி பார்த்து பூரிப்படைய ஏதுவாய் அச்சொற்கள் எல்லாம் அவர்களின் மனோரதங்களின் பூச்செண்டில் மலர்கள் போல பூத்து அலங்கரிக்கலானது ; அவள் உருவாக்கும் சொற்களுக்கு அர்த்தங்கள் இல்லை, அர்த்தங்களே அந்த சொல்லாக தம்மை பிறழ்வித்தன ; ஒரு சொல்லின் நீளத்தில் ஒரு வாக்கியத்தின் ஒட்டுமொத்த அர்த்தம் பொதித்து வைக்க அவளால் மட்டுமே முடிகிறது, மழைத் துளி போன்ற அத்தூய சொற்களுக்கு நகாசுகளோ, பூச்சுகளோ தேவைப்படுவதில்லை, இயல்பின் அர்த்தச் சொறிவை கொணர்ந்து அத்தனை மிருதுவாக உயிரின் விகுதி வரை சென்று தொடும் ஆன்மாவின் இன்பப் பெருக்கெடுக்கும் முத்தக் கீற்றுகள் அவை, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அழகை பரிமளிக்கும் பெயர் இடுகிறாள் அல்லது அவளின் சொற்கள் எல்லாம் எப்போதும் அழகையே வாசிக்கின்றன, பிரிதொரு தேவைக்கும் ஒரு குழல் ஓசை எழுப்புகிறாள், வீணையின் தந்தியை அழுந்தத் தீண்டிய அதிர்வுகள் போல அவ்வோசைகளின் தகவமைப்புகள் பாசத்தின், பரிவின், கனிவின் லயத்தை தூண்டுகின்றன, ஒவ்வொரு சொற்களின் நீட்சியும் ஒரு தேவையுடன் ஆர்வத்தை கிளறும் கள் போல ததும்புகிறது, அதன் தேவைகள் எல்லாம் புகாரின் நீதிக்கூண்டில் நிற்கும் பேரன்பின் வாதங்களாய் தன்னை மன்றாடிக் கேட்பது என்னவெனில் மிக அண்மையிலிருந்து இளைப்பாற்றும் உயிர் தரித்த ஒரு உயிரின் நிழல், அவ்வுயிரின் இருப்பை அருகிலேயே தக்க வைக்கும் சூட்சுமம் ஒரு மகோன்னதத்தின் ஆதரவு, சார்தலின் ஞானம், அவளின் பசிக்கென ஊறும் மார்க்காம்புகள், வாஞ்சையில் மருகும் ஈடற்ற தாய்மை, மேலும் கொஞ்சம் கொஞ்சல்களுடன் இதழ் ரேகைகள் அவ்வளவே... 

இப்படியாக சொற்களின் கனியின் பருவத்தில் கனிந்த அந்த இல்லம் சுகந்தம் மதர்க்கும் மெல்லிய சொற்களின் தூத்தலால் நனைந்த வண்ணமிருந்தது... 


~ சூர்யபாலா., 


தொடரும் :-

புதன், 5 ஆகஸ்ட், 2020

பேரின்பத்திற்கு முந்தைய கணம்... ❤️

                    ~ ❤️ ~

இன்றைய நம் இரவின் 
விருந்திற்கு உணவாக நாம் 
இருவருமே ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம், 
இதற்காக பல யுகங்களாய் 
தகவமைக்கப் பட்டு இங்கே 
கொண்டு விடப் பட்டோமல்லவா? 
இது எத்தனை பிரத்தியோகம்..? 
இரு வேறு உணவுகள் தமது 
ஒரே பசியை பூர்த்தி செய்து கொள்வதென்பது எத்தனை விசித்திரமான ஏற்பாடு..? நூற்றாண்டுகளின் இப்பழைய தேவைக்கு, சில ஆண்டுகளுக்கு 
முன்னம் உருவாக்கப் பட்ட நமது 
புதிய உடல்கள் போதுமானதாயென்ன..? இதில் மேலும் உன்னை புதுபித்து எனக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் பொருட்டு, உன்னை ஒவ்வொரு நுனியாய் ஒப்பனை செய்து சரி 
பார்த்துக் கொள்கிறாய், சுய வதை செய்து சதைகளை தின்னக் கொடுக்க உனக்கு தான் எத்தனை பேராவல்..? 
நான் எந்த ஒப்பனைகளுமின்றி ஈன்ற பாலூட்டியின் முலைக் காம்புகள் போல என் ரகசியங்களை உன் விருப்பத்திற்கு விடுவதே என் திண்ணமாய் இருக்கிறேன், ஏனென்றால் பசியின் அமுதை தாமாகவே தேடி அடைதலில் தான் எத்தனை சுவாரஸ்யம் ? 
உனக்கான இன்றைய என் பரிசை தேடித் தேடி தெரிவு செய்வது உன்னை மேலும் ஏமாற்றும் மனப் போக்கு என்பதை நன்கறிவேன் ; மேலும் புணர்ச்சியின் விதியில் புதிய ஒப்பனைகள் கலையப்பட்டு, இந்த பழைய அங்கங்களின் கூறுகளை தானே அடைகிறோம் ? கலைவதற்கு ஏன் இத்தனை பிரயத்தனம்..? கண்ணே மிருகங்கள் ஒரு போதும் அரிதாரம் பூசிக்கொள்வதில்லையே..? துய்ப்பின் பித்து நிலை எய்துவதில் அவைகளுக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை, பின்னர் அதன் சுவடில்லாமல் மறப்பதிலும் அவைகள் கம்பீரம் தான் : 
எனவே அன்பே என் உண்மையை கலைந்து பார், அதன் ரகசியங்களை அடைகையில் அது உன்னை அசூயை நிமித்தம் சஞ்சலத்தில் ஆழ்த்தலாம், அல்லது அதி பெரும் அற்புதமாய் உன்னை அது பேரின்பத்திற்கு துலங்கச் செய்யலாம், 

என்னில் எதுவுமில்லை  அன்பே !!!
இவ்விரு நிலைக்கும் இத்தனை காலமாய் சமூகக் கட்டமைப்பில் ஊறிய நம் மனித மனோவிகாசமே காரணம் என்பதை அறிவாயா...?

~ சூர்யபாலா.,

சனி, 21 மார்ச், 2020

யட்சி  பாகம் : 3  அவளின் அவன் 

அவளின் அவன் 

அவளின் அடி ஆழம் தாண்டி ஆதி வரை சென்று மன நதியின் வேர் தீண்டிய ஓரிரு எளிய காரணங்களால் சுவர் ஏறி குதித்து அவளின் கடற்கரையின் எல்லையில் அலை விட்டுச் சென்ற கிளிஞ்சல்கள் போல வந்து விழும் அவனை, சிறுமி கண்டெடுத்த கிளிஞ்சல் சேகரம் போல உள்ளங்கையில் வைத்து உயிர் அளிக்கிறாள், அவனை ஏற்றுக் கொண்டதின் காரணத்தை மேலும் நியாயப்படுத்த அவனை பேரன்பால் நிரப்ப முயல்கிறாள், அவனுடனான  நெருக்கத்தை உறுதிப்படுத்தவே கொஞ்சம் இடைவெளி தருகிறாள், அவன் சரியாக அந்த இடைவெளியில் நிரம்பி பொருந்திடும் பட்சத்தில், அவனுக்கான அடுத்தக் கட்ட நிபந்தனைகளை வகுத்து ஒவ்வொன்றாய் அதி சாமர்த்தியமாக பதிக்கிறாள், அவள் தன் எல்லையை விஸ்தாரமாக்கி அவனுக்கு இடம் அளித்துக் கொண்டே அவனுடைய எல்லைக்குள் நுழையும் நிகழ்வை துப்புரவாக செய்கிறாள், அவள் தரும் ஒவ்வொரு சிறு சிறு இடை வெளிக்கும் இணையாக பெரும் வெளியாக அவளின் அனுமானங்கள் நீள்கிறது, நீக்கமற இடம் உள்ள இந்த உலகில், ஏக முகங்கள் இருந்தும் ஒரே ஒருத்தனுக்காக மட்டுமே தன் எல்லா உணர்வுகளின் கதவுகளையும் திறந்து வைக்கிறாள்,  ஒவ்வொரு தாழையும் அவன் விலக்கி உள்ளே நுழைய வேண்டி எந்த வித அழைப்பும் சொடுக்காமல் காத்திருக்கிறாள், ஆர்வத்தை தூண்டும் மற்ற உத்திகளை நேர்த்தியாக, கவனமாக இந்த பருவத்தில் கையாளுகிறாள், தன் உணர்ச்சிகளை பணயம்  வைத்து ஒரு வேட்டை மிருகத்திற்கு வைத்த கண்ணி போல அவனை உணர்ச்சிகளால் வேட்டையாட காத்திருக்கிறாள்,  இந்நிகழ்வில் அவனை குருடனாக்கி, ஒரு ப்ரைலி எழுத்து போல சுயம்புவாக மதர்க்கிறாள், பார்வையற்ற ஒருவன் தொடுதலில் தன் உலகை தழுவி ஆன்மாவின் பாஷையில் எதையுமே கிரஹிக்கிறான் இல்லையா? நேரடியாக அவன் ஆன்மாவை கொண்டு வாசிப்பதை போல உன்னத நிலையை அவனுக்கு அளித்து அவளின் ஆன்மாவை தரிசிக்க, சுவைக்க, சார்ந்து, இணைந்து, நெகிழ அவள் பொக்கிஷமாக பாதுகாத்த அங்கங்களுக்கும் மேலான அவளின் ஆன்மாவையும் அவன் தொட்டுணர, இலை மறை காயாக கடை விரித்துத் தருகிறாள், அவன் முதலில் எந்த பதார்தத்தை தெரிவு செய்கிறான், எதை எந்த அளவு கலவையில், சுவைக்கிறான், அதை அவன் எப்படி எல்லாம் புழங்கிறான் ஆகிய பரிபாஷைகளை வாசிக்கிறாள், இதன் நீட்சியாக இருவருக்கும் இடையில் உள்ள அதீத, சுவாதீனங்களை
மிக துல்லியமாக துளி பிசகும் இன்றி கணக்கிடுகிறாள், இப்படி அவளின் அவனை ஒவ்வொரு திருபங்களுக்கும், நிகழ்வுகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்து, ஒரு அலையில் மிதக்கும் இலை போல இருவரின் ஏற்ற இறக்கங்களை கோவம், வாஞ்சை, பாசம் கொண்டு சமன் செய்கிறாள், அவள் வரைந்த நூலில் சரியாக பொருந்தும் அவனை சிறு சிறு மலர் தருணங்களில் கோர்த்து, தானே பிரசவித்த ஒரு குழந்தை போல கைகளில் ஏந்துகிறாள், மாற்றி மாற்றி தளும்பும் அவளின் செந்நீர் பள பளக்கும் ஆதுர கண்களில் விழுவது அவன் பிம்பம் மட்டும் அல்ல அவள் விரும்பி பிரத்யேகமாய்  உருவாக்கிய பெரும் பாசக்காரன், கொஞ்சும் ரோஷக்காரன், பேரன்பாளன் அவளுக்கேயுரித்தான உலகில் ஒரே ஒருவனிடம் மட்டுமே அவள் கொண்ட
ஏக போக உரிமையும் அவளின் பாத்தியப் பட்ட புலன் மீது தோன்றிய காப்புணர்வுக்கான அரண் அவன், அதில் நிற்கும் வாயிற் காவலன் அவளே தான், அப்பணி தொய்வுறும் வேளை அவளின் அயற்சியில் அவளுக்கென நீளும் நித்ய கிளைகள் சொறியும் ஏகாந்த நிழலின் சொந்தக் காரன், ஆன்ம அபிமானன் அவளின் அவன்...

~ சூர்யபாலா.,

செவ்வாய், 7 நவம்பர், 2017